Sunday, December 5, 2010

ரஜினியையும் என்னையும் ஒப்பிட வேண்டாம்! – கமல்






ன்னையும் ரஜினியையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் என்றார் நடிகர் கமல்ஹாஸன்.
மன்மதன் அம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா சிங்கப்பூரில் நடந்தது. ஆனால் அந்த விழா குறித்த செய்திகள் எதுவும் வெளியில் தெரியவில்லை. எனவே பத்திரிகையாளர்களுக்கு ஒளிப்பதிவு செய்யப்பட்ட அந்த நிகழ்ச்சியை நேற்று சனிக்கிழமை போட்டுக் காட்டினர்.
அடையாறு பார்க் ஷெரட்டனில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பின்னர் கமல் பேட்டியளித்தார்.
‘அப்போது ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி எந்திரன் படம் நடித்தார். இந்தியாவிலே பெரிய பட்ஜட் படமாகவும் வெற்றிப் படமாகவும் அமைந்துள்ளது. அதே போல நீங்களும் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்கும் திட்டமுள்ளதா.. ஏற்கெனவே இதற்காக நீங்கள் முயற்சி எடுத்ததாகக் கூறுகிறார்களே?’, என்று கேட்டனர் பத்திரிகையாளர்கள்.
இதற்கு கமல் சொன்னது பதில் இது:
“நான் யாரையும் காப்பி அடிப்பதில்லை. எனக்கென்று தனித்துவம் இருக்கிறது. நடிப்பில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டால், என் குரு சிவாஜியைத்தான் நினைப்பேன். அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
என்னையும், ரஜினியையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். எங்களை நாங்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை என்றும், சேர்ந்து நடிப்பதில்லை என்றும் பல வருடங்களுக்கு முன்பே ஒப்பந்தம் செய்துகொண்டோம். இளமை ஊஞ்சலாடுகிறது காலத்திலேயே இந்த முடிவை எடுத்துவிட்டோம்.
பட்ஜட்டுன்னு பார்த்தா, தசாவதாரம் பெரிய பட்ஜெட் படம்தான். அதேபோல் இந்த மன்மதன் அம்பும் பெரிய பட்ஜெட் படம்தான்…,” என்றார்.
கமல் நடிப்பில் யாரைக் காப்பியடிக்கிறார் என்பது நமக்குத் தேவையில்லாதது… ஆனால் சில விஷயங்களை நினைவுபடுத்திக் கொள்வது நல்லது.
ரஜினியின் சிவாஜி – த பாஸ் வெற்றிக்குப் பிறகு, அதே பாணியில் தயாரித்து, அதே பாணியில் வெளியிடப்பட்ட படம் தசாவதாரம். சிவாஜியைப்போலவே அதிக தியேட்டர்களில் வெளியிட்டார்கள். கலைஞர் டிவிக்கு படத்தை விற்கும்போது கூட, சிவாஜியை விட ஒரு ரூபாயாவது அதிகமா எங்க படத்துக்குக் கொடுக்கணும் என்று கூறி விற்றதாக படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறியிருந்தார்.
அடுத்து இந்த மன்மதன் அம்பு. இதன் பட்ஜெட் ரூ 50 கோடி என்று நேற்றுதான் சொன்னார்கள். அதையும் அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை… சைகையில்தான் காட்டினார்கள். மீண்டும் கேட்ட போது, ‘50 கோடின்னு போடுங்க… இல்ல  பக்கத்துல ஒரு ஜீரோ போட்டுக் கூட போடுங்க… இவர்கிட்ட (உதயநிதி) இல்லாத பணமா என்றார் கமல். (இதற்கு முன் ரூ35 கோடி என்றார்கள்). எந்திரனுக்கு மலேசியாவில் பெரிய அளவில் இசை வெளியீட்டு விழா நடத்த, அதே பாணியில் இந்தப் படத்துக்கும் சிங்கப்பூரில் நடத்தினார்கள்.
இப்போது சென்னையில் மட்டும் 30 தியேட்டர்களில் இந்தப் படத்தையும் வெளியிடப் போகிறார்களாம்.
ஆக, எப்படிப் பார்த்தாலும் கமல் படங்கள் உள்ளிட்ட, இன்றைய படங்களின் வெற்றியைச் சொல்ல, வர்த்தக அளவை மதிப்பிட, ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள… ரஜினியின் படங்களே அளவுகோல்…அதுவும் இன்று நேற்றல்ல…. 30 ஆண்டுகளாக!

No comments:

Post a Comment